சின்னக்குட்டியாரின் யாழ்ப்பாணப் புகையிலை தொடர்பான பதிவு (https://web.facebook.com/permalink.php?story_fbid=pfbid02zLjCoZz2spfADGYDkARq2t3WfXToxUfuSBL2xKJgLGkQQ9i5y5b4MW3Cw1H7Rnaql&id=61563805347421) இக்கரைப் பதிவு. அதாவது யாழ்ப்பாணத்தில் இயங்கிய சங்கம், இங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று முழுமையாகவும் நாமே நம்கதை கூறும் ஒருபக்கப் பதிவு.
பாட்டிக்கு வெற்றிலை போடவேண்டுமென்றால் முதல்தர யாழ்ப்பாணப் புகையிலைதான் வேண்டும்.
முதல் தர யாழ்ப்பாணப் புகையில கொண்டு வரலைன்னா உன்னைத் திரும்பவும் துரத்துவேன் கேட்டுக்க.
புகையிலை வாங்கி வந்து ஒப்படைத்ததும், பாட்டி அதை வாங்கிக் கவனமாகச் சோதிப்பாள். மேலும் கீழும் புரட்டிப் புரட்டிப் பார்ப்பாள். ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை நான்கைந்து முறையாவது முகர்ந்து பார்ப்பாள்.
ஊஹூம் ஊஹூம். அந்த இப்ராஹிம் குட்டிகிட்ட போய்ச்சொல்லு, பாட்டிகிட்ட இந்த வெளையாட்டெல்லாம் வேணாம்னு, அவனைக் கொழந்தைலேர்ந்து பார்க்கிறேன். அவனோட வாப்பா வியாபாரம் தொடங்கறதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். இந்தா இந்தப் கள்ளப் புகையிலையை எடுத்துக்கிட்டுப் போய்க் குடு, இதுக்கு வீரியம் போதாது, செல்லத்தில ஒரு கழஞ்சுகூட இல்ல.
என்னோட புள்ளைக்குத் தெரியுமா?யாழ்ப்பாணப் புகையிலயோட தரம்?இதுக்கு என்ன மணம்!என்ன வீரியம்!என்ன உஷார்!இதோட தரத்தாலேதானே பாட்டி இத்தனை காலமா சாகாம எந்தச் சுகவீனமும் இல்லாம இருக்கேன்?
இதனாலதான் இந்த யாழ்ப்பாணப் புகையில அத்தனை தூரத்திலேர்ந்து வருது, கடல்தாண்டி மறுகரையிலைர்ந்து. இதோட வீரியத்தை அனுபவிச்சா தான் தெரியும். சொல்லிப் புரிய வைக்க முடியாது.இதுக்கு வீரியம் இருக்குதுங்கிறதுக்காக கொழந்தைங்க வெற்றிலை போடக்கூடாது. கன்னமும் இதயமும் துவண்டு போயிடும். கொஞ்சம் பெரியவனான பெறகு தொண்டையும், இதயமும் திடம் வெச்சபிறகு தொடங்கலாம். அப்ப எந்தப் பிரச்சனையுமில்ல.
உன் அப்பனுக்கு வெளிநாடு போக ஆசை. எங்கேன்னு தெரியுமா? இந்தப் புகையில வெளையிற நாட்டுக்கு. நிறையச் சம்பளம் கெடைக்கும்னு அவன் சொல்றான். அந்தக் கதையெல்லாம் வேணாம். புகையில இங்க வந்து சேர்ந்தா போதும். அங்க போய்ப் புகையில பயிர் பண்ண வேண்டிய தேவை எனக்கில்லைன்னேன். உன் அப்பன் அசடு வழிஞ்சான்.
பாட்டி மறைந்து சில காலம் கழிவதற்குள் குட்டிசேகரனின் தந்தை வேலை நிமித்தமாகப் புகையிலை நாட்டுக்குப் போனார். ஓராண்டு கழிந்து ஊருக்குத் திரும்பினார். விடுமுறை முடிந்து மீண்டும் கிளம்பும்போது குட்டி சேகரனையும் அவனது தாயாரையும் அழைத்துப் போனார். அவ்வாறு குட்டிசேகரன் புகையிலைத் தோட்டங்களின் ஊர்க்காரன் ஆனான்.